சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைதான பெண் மந்திரவாதி திருச்சி சிறையில் அடைப்பு

சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைதான பெண் மந்திரவாதி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-11-05 23:00 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. விவசாயியான இவருக்கு 2 குழந்தைகள். கடந்த மாதம் 25-ந் தேதி மூத்த மகள் ஷாலினி (வயது 4) வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள். இதைக்கண்ட ஷாலினியின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த கொலை குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மனைவி சின்னப்பிள்ளை (வயது 47) என்பவரிடம் விசாரணை நடத்தினார்கள். மந்திரவாதியான அவர் அந்த பகுதியில் குறி சொல்வது, பில்லி சூனியம் வைப்பது உள்ளிட்ட மாந்த்ரீக தொழில் செய்து வந்தார்.

விசாரணையில், அவர் தான் சிறுமி ஷாலினியை கொலை செய்தது தெரியவந்தது. தனது மந்திர சக்தியை அதிகரிப்பதற்காக, விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை சின்னப்பிள்ளை நைசாக அழைத்துச்சென்று காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் திருமயம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை திருச்சி சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முகமதி அலி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெண் மந்திரவாதி சின்னப்பிள்ளை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்