மத்திகிரி அருகே ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஜவுளிக்கடை ஊழியர் குத்திக்கொலை செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-05 22:15 GMT
மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள சிப்பாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆசிப்கான் (வயது 23). இவர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலையை முடித்துக் கொண்டு ஆசிப்கான் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சிப்பாய்பாளையம் உருது பள்ளி அருகே சென்ற போது, அவரை வழிமறித்து தகராறு செய்த 3 பேர் ஆசிப்கானை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஆசிப்கான், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக, மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவித்ததாவது:-

3 பேருக்கு வலைவீச்சு

கடந்த, 2017-ம் ஆண்டு, மத்திகிரியில் நடந்த உரூஸ் திரு விழாவின் போது, கொலை செய்யப்பட்ட ஆசிப்கானின் அண்ணன் முகமது கான் என்பவருக்கும், காடிபாளையத்தை சேர்ந்த முகமது ரியாஸ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆசிப்கான், அவரது அண்ணன் முகமது கான், சல்மான்கான் ஆகிய 3 பேர் மீதும் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த ஆசிப்கான் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, காடிபாளையத்தை சேர்ந்த முகமது ரியாஸ், அப்துல் சுல்தான், அர்பாஸ் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்