தொடர் விடுமுறை காரணமாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தொடர்விடுமுறை காரணமாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2018-11-05 21:45 GMT
தளி, 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்கள் சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலுக்கு அருகில் திருமூர்த்திஅணை படகு இல்லம், வண்ணமீன் காட்சியகம், சிறுவர்பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைந்துள்ளன.

அது மட்டுமின்றி கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு உப்புமண்ணம்பட்டிஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.

பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் அங்குள்ள நீராதாரங்கள் மூலமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பஞ்சலிங்க அருவியில் நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை யொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் பஞ்சலிங்க அருவி பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மலை மீதுள்ள பஞ்சலிங்கங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்