கல்லட்டி மலைப்பாதையில் தாயை பிரிந்த கடமான் குட்டி மீட்பு

கல்லட்டி மலைப்பாதையில் தாயை பிரிந்த கடமான் குட்டி மீட்கப்பட்டது.

Update: 2018-11-07 22:00 GMT
மசினகுடி, 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் கல்லட்டி மலை பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு புலி, யானை, சிறுத்தைப்புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் சில நேரங்களில் சாலை ஓரத்திற்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த சாலையில் உள்ள 27-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று காலை ஒரு கடமான் குட்டி நடக்க முடியாமல் தவித்தப்படி நின்றது. இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து சிங்காரா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனக்காப்பாளர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று பிறந்து சில மணிநேரமாக ஆன அந்த குட்டியை மீட்டனர். வனத்துறையினர் அந்த கடமான் குட்டியை வனப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலூட்டினர். பின்னர் அந்த குட்டியை ஈன்ற தாய் கடமானை சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை தேடினர்.

ஆனால் அந்த பகுதியில் தாய் கடமான் இல்லாததால் தொடர்ந்து குட்டியை அதே பகுதியில் விட பத்திரமாக கண்காணித்து வருகின்றனர். தாய் கடமானை தேடும் பணியில் தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்