நெல்லை அருகே பயங்கரம்: தொழிலாளி கொன்று புதைப்பு நண்பரிடம் போலீசார் விசாரணை

நெல்லை அருகே தொழிலாளி கொன்று புதைக்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-08 21:30 GMT
நெல்லை, 

நெல்லை அருகே தொழிலாளி கொன்று புதைக்கப்பட்டார். இதுகுறித்து அவருடைய நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

நெல்லை அருகே உள்ள சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 60), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவருடைய உறவினர்கள் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தங்கபாண்டியன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நெல்லை டவுன் பகுதியில் தங்கபாண்டியன் மோட்டார் சைக்கிள் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தங்கபாண்டியனுடன், அவருடைய நண்பரான கட்டிட தொழிலாளி முருகன் என்பவர் சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து முருகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

தங்கபாண்டியனும், முருகனும் ஒரே இடத்தில் வேலை செய்துள்ளனர். அவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது. வேலை செய்த இடத்தில் தங்கபாண்டியன் பணத்தை வாங்கிக்கொண்டு முருகனை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

கொன்று புதைப்பு

இதில் ஆத்திரம் அடைந்த முருகன், தங்கபாண்டியனை பழி வாங்க திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று அவரும், தங்கபாண்டியனும் மது குடித்துள்ளனர். பின்னர் தங்கபாண்டியனை முருகன் மோட்டார் சைக்கிளில் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவரை தடியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கம்மாளங்குளம் பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து முருகனை போலீசார் அழைத்து கொண்டு கம்மாளங்குளம் சென்றனர். அவர் தங்கபாண்டியனை கொன்று புதைத்த இடத்தை தேடினர். மழை பெய்து கொண்டு இருந்ததால் அந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் முருகனை நெல்லை டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பரபரப்பு

மேலும், போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கபாண்டியன் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். கட்டிட தொழிலாளி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்