மானாமதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மானாமதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-11-08 22:30 GMT
மானாமதுரை,

தமிழகம் முழுவதும் பன்றி, டெங்கு காய்ச்சல் பரவி பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு வரை ஏற்பட்டு வருகிறது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் தினமும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று நோய் ஏற்படும் வண்ணம் உள்ள இடங்களை கண்டறிந்து சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் வண்ணம் உள்ள இடங்களை பராமரிக்காமல் வைத்திருந்தால் நில உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மானாமதுரை புதிய பஸ்நிலைய வளாகத்தில் பயணிகளின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பராமரிப்பு இல்லாததால் குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகின்றன. நாள்கணக்கில் குப்பைகள் தண்ணீர் தொட்டியில் கிடப்பதால் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பயணிகளை தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- பகலில் ஈக்களும், இரவில் கொசுக்களும் படையெடுத்து வருவதால் பயணிகள் குழந்தைகளுடன் பரிதவித்து வருகின்றனர். புது பஸ்நிலையத்தில் உள்ள சாக்கடை வாருகால் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகளால் நிரம்பி வழிகின்றன. கழிவு நீர் செல்ல வழியின்றி சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் வெளியேறி பொதுமக்கள், பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பஸ்சில் பயணம் செய்ய வருபவர்களும் தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். மானாமதுரையில் பல இடங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருந்து தொற்று நோய் பரவி வருகிறது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக புது பஸ் நிலைய வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்