பணி வழங்காததை கண்டித்து சேலத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி வழங்காததை கண்டித்து சேலத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-08 22:52 GMT
சேலம்,

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி வழங்கப்படாததை கண்டித்து சேலத்தில் நேற்று தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் மற்றும் மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தன மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்கள் நலப்பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நலப்பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைத்தீஸ்வரன் (வயது 55) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவருக்கு தண்ணீர் கொடுத்து சிலர் ஆறுதல் கூறினர். இதையடுத்து வைத்தீஸ்வரனுக்கு மயக்கம் தெளிந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 13 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கத்தால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பணி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

மேலும், அவ்வாறு பணி வழங்காதவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் காலியாக உள்ள இடத்தில் பணி வழங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை பெற்றார். எனவே, மக்கள் நலப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க.ஆட்சி அமைக்கும்போது, மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்