வேப்பூரில்: தடுப்புச்சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது; 23 பேர் படுகாயம் - துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது சம்பவம்

வேப்பூரில் தடுப்புச்சுவரில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-11-08 21:45 GMT
வேப்பூர், 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் வசித்து வந்த மாணிக்கத்தின் மருமகன் அருள் என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார்.

இதையடுத்து துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள் 60-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் நேற்று பெரும்பாண்டியில் இருந்து முண்டியம்பாக்கம் நோக்கி புறப்பட்டனர். இதில் ஒரு வேனை அரியலூர் அருகே நம்மங்குளம்குடிகாடு கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் முத்துக்குமார் என்பவர் ஓட்டினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென முத்துக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி மேம்பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பெரும்பாண்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் பரமசிவம் (வயது 65), கெங்காசலம் மகன் மாயவேல்(35), சிவசாமி மனைவி ஆண்டாள்(55), அண்ணாமலை மகன் தேவராஜன்(51) உள்ளிட்ட 23 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், விபத்தில் படுகாயமடைந்த தேவராஜன் உள்ளிட்ட 23 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 3 பேர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். பின்னர் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த வேனை கிரேன் எந்திரத்தின் உதவியுடன் சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்