சர்கார் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களின் முன்பு அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் பேனர்களை கிழித்து எறிந்தனர்

சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களின் முன்பு அ.தி.மு.க.வினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அங்குள்ள பேனர்களை கிழித்து எறிந்தனர்.

Update: 2018-11-08 23:51 GMT
புதுச்சேரி,

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்ற காட்சிகள் வருகின்றன. இதற்கு தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியின் துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, மீனவர் அணி செயலாளர் ஞானவேல், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் அண்ணாசாலை அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாசாலையில் உள்ள ரத்னா தியேட்டரை முற்றுகையிட்டனர்.

அங்கு தியேட்டரின் முன்பு கட்டப்பட்டு இருந்த சர்கார் திரைப்படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். அப்போது தியேட்டரில் சினிமா காட்சி ஓடிக்கொண்டு இருந்ததால் தியேட்டரின் மெயின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் அந்த கதவை தள்ளினர். அதுபற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும், அதுவரை அந்த படத்தை திரையிடக்கூடாது என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து போலீசார், தியேட்டர் உரிமையாளரை அழைத்து இது குறித்து தெரிவித்தனர். அப்போது அவர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கடலூர் சாலையில் உள்ள புரோவிடன்ஸ் வணிக வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்குள்ள 4 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது தியேட்டர்களின் உரிமையாளர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறும் போது, “தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச திட்டங்களை கொண்டு வந்தார். அதனை கொச்சைப்படுத்தும் விதமாக சர்கார் திரைப்படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முழுமையாக நீக்க வேண்டும். அதுவரை புதுவையில் சர்கார் திரைப்படத்தை திரையிடக்கூடாது. இல்லையென்றால் அந்த தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்”. என்றார்.

மேலும் செய்திகள்