தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை நாமக்கல்லில் இல.கணேசன் பேட்டி

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என நாமக்கல்லில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

Update: 2018-11-09 23:15 GMT
நாமக்கல், 

நாமக்கல்லில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய பொருளாதார நிலை உலக அளவில் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணர்களான முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் வேறுவிதமாக விமர்சனம் செய்கின்றனர். எது உண்மை என்பதை மக்கள் அறிந்து வைத்து உள்ளனர்.

கருப்பு பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை ஓட்டிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு, கருப்பு பணம் ஒழிப்பு என்பது துக்க தினம் தான். காங்கிரஸ் கட்சிக்கு பண மதிப்பிழப்பு என்பது பேரிழப்பு. இதனால் தான் காங்கிரஸ் கட்சி அந்த தினத்தை துக்க தினம் என்கிறது. நாங்கள் அந்த தினத்தை கொண்டாடுகிறோம்.

சந்திரபாபு நாயுடு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுவிட்டால் தன்னை பிரதமராக தேர்வு செய்வார்கள் என சந்திரபாபு நாயுடு கனவு காண்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மத்தியில் இமயம் போல் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்துவோம் என பேசுகிறார். மேலும் பா.ஜனதா ஆட்சி பாசிச ஆட்சி என்கிறார். ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்பு இல்லை. ரஷ்யாவில் பாசிச ஆட்சியை நடத்தியவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும்.

பாசிச ஆட்சியை உண்மையாக வெறுப்பவராக இருந்தால், தனக்கு அந்த பெயரை வைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் அவமானப்பட வேண்டும். எனவே அவர் தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம். கருணாநிதி காலத்தில் அவரது தலைமையை சுற்றி சிறிய கட்சிகள் இருந்தன. ஆனால் இப்போது சிறிய கட்சிகளை நம்பி தான் தி.மு.க. அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இரு தலைவர்கள் மறைவுக்கு பிறகு மக்கள் 3-வது மாற்று சக்தியாக பிரதமர் மோடியை கருதுவதோடு, பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளது.

சர்கார் திரைப்பட விவகாரத்தில் மறு தணிக்கைக்கு தயாரான தணிக்கைக்குழு இதை முன்பே நன்கு கவனித்து இருக்க வேண்டும். அந்த குழுவுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்