சர்கார் திரைப்படத்தில் அரசின் திட்டங்கள் தவறாக சித்தரிப்பு - தம்பிதுரை குற்றச்சாட்டு

சர்கார் திரைப்படத்தில் அரசின் திட்டங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-11-09 22:30 GMT
வடமதுரை, 

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னம்பட்டி, பா.கொசவபட்டி, பாடியூர் மற்றும் குளத்தூர் ஊராட்சிகளில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரைப்படம் என்பது மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அதுபோல நல்ல சமூக சீர்திருத்த கருத்துள்ள திரைப்படங்களில் நடித்தார். தற்போது வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க. அரசின் நல்ல திட்டங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த படத்தை தயாரித்த நிறுவனம் தி.மு.க. கட்சியினருக்கு சொந்தமானது.

சர்கார் படத்தை தணிக்கை செய்வதற்கு முன்பாகவே, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், படத்தில் தவறான அரசியல் செய்திகள் சொல்லப்படுவதாக விமர்சனம் செய்திருந்தார்கள். சினிமாவில் வேண்டுமானால் விஜய், முதல்-அமைச்சராக நடிக்கலாம். நிஜ வாழ்க்கையில் அது ஒத்துவராது என்ற கருத்தையும் தமிழிசை சவுந்தரராஜன் முன்பே சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது மத்திய அரசின் கீழ் செயல்படுகிற தணிக்கை குழு சரியான முறையில் திரைப்படத்தின் காட்சிகளை பார்த்து அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.

ஆளும் கட்சியையோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளை பற்றியோ விமர்சனம் செய்திருப்பதை தவிர்த்திருக்க வேண்டும். தணிக்கை குழு தனது பணியை சரியாக செய்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. இந்த விஷயத்தில் தணிக்கை குழு தவறு செய்துள்ளது. எனவே இனிமேல் வெளிவரும் திரைப்படங்களில் அரசியல் ஆதாயத்துக்காக ஒரு அரசை பற்றி தவறான நிகழ்வுகளை காண்பிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்