துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடர் பாக்கெட்டில் ரூ.12½ லட்சம் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பானங்கள் தயாரிக்கும் பவுடர் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கஇலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-09 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தங்கம் கடத்தல்

அப்போது 2 பேரின் உடைமைகளில் குளிர்பானங்கள் தயாரிக்கும் பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அந்த பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் சிறிய அளவிலான தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள், அந்த தங்கத்தை துபாயில் இருந்து சென்னைக்கு யாருக்காக கடத்தி வந்தனர்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்