கோஷ்டிபூசல் உச்சகட்டம்: திருச்சியில் காங்கிரசார் இருபிரிவாக ஆர்ப்பாட்டம்

கோஷ்டி பூசலின் உச்சகட்டமாக திருச்சியில் காங்கிரசார் இருபிரிவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-11-10 00:21 GMT
திருச்சி,

மத்திய பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் நவம்பர் 8-ந் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.1000, ரூ.500 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து திடீரென உத்தரவு பிறப்பித்தது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரும் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 3-வது ஆண்டு தொடங்கியும் பழைய நிலையை அடைய முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளதாக கூறி, மத்திய அரசை கண்டித்து நேற்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகமான அருணாசல மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜா நசீர், ரெக்ஸ், வக்கீல் சரவணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.சி.பாபு, திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சுஜாதா, முன்னாள் கவுன்சிலர் ஹேமா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தம் 4 இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகரில் மட்டும் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி மாநகரில் காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக செயல்பட்டு வருவதே காரணம் என்று கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் அருணாசல மன்றத்திலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் சிந்தாமணி அண்ணா சிலை அருகிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தனர். அருணாசல மன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை விட அதிக அளவில் கூட்டத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினால், மாநில தலைவர் பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கப்படலாம் என்ற எண்ணத்தில், அண்ணாசிலை அருகே கோஷ்டி பூசலின் உச்ச கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விவரம் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்