நாமக்கல்லில் இருந்து பழைய ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டன

நாமக்கல்லில் இருந்து நேற்று பழைய ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2018-11-10 22:30 GMT
நாமக்கல், 
நாமக்கல் மாவட்டத்தில் 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,621 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றிற்கு தேவையான ஒப்புகை சீட்டுடன் கூடிய புதிய ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெல் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இவை சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த பழைய ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஐதராபாத்தில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பழைய 3,299 ஓட்டுப்பதிவு எந்திரம், 2,580 கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை நேற்று 4 கன்டெய்னர் லாரிகளில் நாமக்கல் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பழைய ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் ஐதராபாத் கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்