பூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதலான குடோனுக்கு ‘சீல்’

பூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதலான குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2018-11-10 21:30 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியில், பெங்களூரு-பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள ஒரு குடோனில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு குட்கா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரிந்தது. குடோனில் பதுக்கிய 10 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 லோடு ஆட்டோக்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில், பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று குடோனில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கு பறிமுதல் செய்து வைத்து இருந்த குட்காவின் தரத்தை அறிய சிலவற்றை சோதனைக்கு எடுத்துக்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் அந்த குடோனை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அந்த குடோனின் உரிமையாளர் சுந்தரம்(வயது 40) என்பவரை பூந்தமல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அதை வாடகைக்கு எடுத்து இருந்த செந்திலை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்