உடுமலை பஸ் நிலையத்தில் கிராமப்புற அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் பயணிகள் அவதி

உடுமலை பஸ் நிலையத்தில் கிராமப்புற அரசு பஸ்கள் சரிவர இயங்காததால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

Update: 2018-11-10 22:30 GMT

போடிப்பட்டி,

உடுமலை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கல்வி, வேலை என பல்வேறு காரணங்களுக்காக உடுமலை நகருக்கு வந்து செல்லவேண்டிய நிலைய உள்ளது. இத்தகைய பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக உள்ளது அரசு பஸ்கள்தான்.

இந்த நிலையில் கிராமப்புற பஸ்கள் முன் அறிவிப்பு இல்லாமல் திடீர் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். நேற்று மாலை உடுமலை பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் சுற்றுவட்டார கிராமங்களுக்குச்செல்லும் பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக கிராமப்புற பஸ்கள் வராததால் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘‘ பெரும்பாலான கிராமப்புற பஸ்களில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். ஆனால் டிரைவர் இல்லை. கண்டக்டர் இல்லை. பஸ் பழுது என ஏதேனும் காரணங்களை கூறி பஸ்களை இயக்குவதில்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டிய இடத்துக்கு செல்லமுடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.

தற்போது உடுமலையிலிருந்து மாலை 4.30 மணிக்கு கிழுவன்காட்டூர், பெருமாள்புதூர் வழியாக ருத்திரபாளையம் செல்ல வேண்டிய அரசு பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருக்கிறோம். ஆனால் 5 மணிக்கு மேலாகியும் பஸ்கள் வரவில்லை. இதுகுறித்து கேட்டால் டிரைவர் இல்லாததால் பஸ் வராது என்று பதில் கூறுகிறார்கள். எனவே இனி பஸ் மாறி,மாறி வீடு சென்று சேர வேண்டும். இதனால் பல பயணிகள் ஒரே பஸ்சில் முண்டியடித்து ஏறுவதால் கூட்ட நெரிசல், அதிக செலவு, காலவிரயம் என பல சிரமங்களை கடந்துதான் சென்று வேண்டிய நிலை உள்ளது.

காலை நேரத்தில் எதிர்பார்த்து காத்திருக்கும் பஸ் வராத நிலையில் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் கடும் மன அழுத்தத்துடன் மாற்று வழி தேடவேண்டிய நிலை ஏற்படுகிறது. கிராமப்புற பஸ்களை விடுத்து நகரப்புற பஸ்களுக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. ஏனெனில் எக்ஸ்பிரஸ் பஸ்களில் அதிக வசூல் ஆவதால் டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் கிராமப்புற பஸ்களை நிறுத்தி விட்டு எக்ஸ்பிரஸ் பஸ்களை இயக்குவதாக தெரிகிறது. இதேபோல் பல வழித்தடங்களில் இயக்கப்படும் கிராமப்புற பஸ்கள் அடிக்கடி இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதாக சக பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே கிராமப்புறங்கள் வழியாக இயக்கப்படும் பஸ்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து தினசரி அனைத்து நேரங்களிலும் தவறாமல் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அரசு பஸ்களையே அதிக அளவில் நம்பி இருக்கும் கிராமப்புற மக்களின் சிரமம் தீர்க்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது

மேலும் செய்திகள்