செந்துறை அருகே நில தகராறில் முதியவர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

செந்துறை அருகே நில தகராறில் முதியவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-10 22:15 GMT

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த கீழமாளிகை நடுத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 70). விவசாயியான இவருக்கும், பக்கத்து நிலத்துக்காரரான ஆனந்தனுக்கும் இடையே கடந்த 6 மாதமாக நில பிரச்சினை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை கலியமூர்த்தி பொன்பரப்பியில் இருந்து கீழமாளிகை நோக்கி தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஆனந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்களான கலைச்செழியன், சுப்ரணியன் ஆகியோர் கலியமூர்த்தியை மடக்கி உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கலியமூர்த்தி தப்பிப்பதற்காக அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சமடைந்தார். இதையடுத்து ஆனந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் கலியமூர்த்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் முதியவரை தாக்கி விட்டு தப்பியோடிய ஆனந்தன், கலைச்செழியனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுப்ரமணியனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்