அரசியல் காரணங்களுக்காக, என்னை வழக்கில் சிக்க வைக்க போலீஸ் முயற்சி வீடியோ மூலம் ஜனார்த்தனரெட்டி குற்றச்சாட்டு

அரசியல் காரணங்களுக்காக என்னை வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாக வீடியோ மூலம் ஜனார்த்தனரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2018-11-10 22:30 GMT
பெங்களூரு, 

என் மீதான புகாருக்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக என்னை வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாக வீடியோ மூலம் ஜனார்த்தனரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

வீடியோ வெளியிட்டார்

பெங்களூருவில் நிதி நிறுவன அதிபரான சையத் அகமது பரீத்திடம் இருந்து 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்்கில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி இருந்தார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜனார்த்தனரெட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டு அவரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலையில் பெங்களூருவில் குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி திடீரென்று ஆஜரானார். முன்னதாக தன் மீது கூறப்படு்ம் குற்றச்சாட்டு குறித்து வீடியோவில் ஜனார்த்தனரெட்டி பேசி, அந்த வீடியோவை நேற்று மதியம் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஜனார்த்தனரெட்டி பேசியதாவது:-

நிர்பந்தம் காரணமாக...

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. கடந்த சில நாட்களாக என்னை பற்றி பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. நான் ஐதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாக தொலைக்காட்சி சேனல்களில் சொல்கிறார்கள். நான் எங்கும் ஓடவில்லை. பெங்களூருவிலேயே இருக்கிறேன். பெங்களூருவில் இருந்தபடியே எல்லா நடவடிக்கைகளையும் கவனித்தேன். விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி இருப்பது பற்றி கவலைப்பட வேண்டாம் என்று வக்கீல்கள் கூறியுள்ளனர்.

என்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, நானே பேசி வீடியோ வெளியிட்டுள்ளேன். இந்த வழக்கில் என் மீது வழக்கு ஏதும் பதிவாகவில்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க போலீசார் முயற்சிக்கிறார்கள். அரசியல் தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக என்னை இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர்.

ஒத்துழைப்பு கொடுப்பேன்

நான் எந்த விதமான தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் தலைமறைவாக வேண்டிய அவசியமில்லை. பெங்களூரு நகரில் தான் தங்கி உள்ளேன். இந்த வழக்கில் போலீசார் விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு அனுப்பியுள்ளனர். நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி இருக்கிறார்கள். நான் இன்றே (நேற்று) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்.

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். பத்திரிகையாளர்களை திசை திருப்ப குற்றப்பிரிவு போலீசார் முயற்சிக்கிறார்கள். நான் ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். அதனால் போலீசார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் போலீசார் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜனார்த்தனரெட்டி பேசி இருந்தார்.

மேலும் செய்திகள்