தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி

தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி மற்றும் கமலை கருதவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-11 22:45 GMT
நாகர்கோவில்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டக்குழு சிறப்பு பேரவை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்பராயன் பங்கேற்று பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அனேகமாக நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரலாம். தமிழக அரசும், மத்திய அரசும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஊழல் முறைகேட்டை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்தது போல பிரதமர் நரேந்திரமோடி பேசி வந்தார். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரபேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஊழலுக்கு அப்பாற்பட்டிருந்தால் ஏன் விசாரணைக்கு உட்படுத்த மறுக்கிறார்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து தேர்தலை சந்திக்க போகிறார்கள் என்பது உறுதியாகி விட்டது. அ.தி.மு.க., பா.ஜனதாவை எதிர்த்து ஒரு கூட்டணியை அமைப்பதே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நோக்கம். தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்