கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி செய்தவர் கைது

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். தலை மறைவான அவரது மனைவி, மகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-11 22:15 GMT
கரூர்,

கரூர் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46). விவசாயியான இவர், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எனக்கும், கரூர் வடகரையை சேர்ந்த நல்லசுப்ரமணியத்துக்கும் கடந்த 5 ஆண்டுகளாக நட்பின் அடிப்படையில் பழக்கம் இருந்தது. இந்தநிலையில் நல்லசுப்ரமணியம் அரசு உயர்பதவியில் உள்ள ஆட்களை தனக்கு தெரியும் எனவும், பணம் தந்தால் எளிதில் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் எனவும் என்னிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் நான் எனது உறவினர்களின் மகன்களுக்கு அரசு வேலை வாங்கி தருமாறு நல்லசுப்பிரமணியம், அவரது மனைவி சரஸ்வதி, மகள் பிரியங்கா மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வரை பணம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர்கள் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் பணம் தரவில்லை. எனவே மோசடியில் ஈடுபட்ட மேற்கண்ட 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வலைவீச்சு

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்சவேணி விசாரணை நடத்திய போது, நல்லசுப்ரமணியம் உள்ளிட்டோர் சேர்ந்து பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.58 லட்சத்து 85 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு நல்லசுப்ரமணியத்தை கைது செய்து, தலைமறைவான சரஸ்வதி, பிரியங்கா, சரவணன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்