ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.8 லட்சம் மோசடி - 3 பேர் கைது

கோவையில் ஆன்லைனில் அரிசி வாங்கி ரூ.8 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-11 21:30 GMT
போத்தனூர்,


கோவையை அடுத்த போத்தனூர் கண்ணுசாமி வீதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 22), பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள நவதானிய மொத்த ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவை போத்தனூரில் உள்ள கடைவீதியில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் சார்பில் 21 டன் அரிசி தேவை என்று ஆன்லைனில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சத்தை அந்த நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி அந்த நிறுவனத்துக்கு 21 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அரிசியை பெற்றுக்கொண்ட போதிலும் மீதமுள்ள பணத்தை செலுத்தவில்லை. இதையடுத்து கவுதம், அந்த நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு மீதமுள்ள பணத்தை செலுத்தும்படி கூறினார்.

இதைதொடர்ந்து அந்த நிறுவனத்தை நடத்தி வந்த போத்தனூரை சேர்ந்த அஸ்ரப் (31), அப்துல்சலீம் (37), ஜான்பாட்சா (32) ஆகியோர் ரூ.8 லட்சத்து 8 ஆயிரத்துக்கான காசோலையை கொடுத்தனர். அதை கவுதம் வங்கியில் வசூலுக்கு போட்டபோது கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பியது.

இதையடுத்து கவுதம் அவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் நேரில் வந்து பணத்தை வாங்கி செல்லும்படி கூறினார்கள். உடனே கவுதம், போத்தனூரில் உள்ள கடை வீதிக்கு சென்று அவர்களிடம் பணம் கேட்டார். அதற்கு அவர்கள் பணத்தை தர முடியாது என்றும், தொடர்ந்து பணம் கேட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரப், அப்துல்சலீம், ஜான்பாட்சா ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து பலரிடம் ஆன்லைன் மூலம் அரிசி உள்பட நவதானிய பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்