துறையூர் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது மொபட் மோதியதில் தொழிலாளி படுகாயம்

துறையூர் அருகே சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடை மீது மொபட் மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-11 22:45 GMT
துறையூர்,

துறையூரை அடுத்த கரட்டாம்பட்டியில் கடந்த 9-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் கரட்டாம்பட்டியில் இருந்து மண்பறை செல்லும் சாலையில் பாதியளவு ஆக்கிரமிக்கப்பட்டு, இரும்பு தகடுகளை கொண்டு மேடை அமைக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்த பின்னரும், அந்த மேடை அகற்றப்படவில்லை.

இந்நிலையில் புலிவலம் அருகே உள்ள சீரங்கனூரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான கணேசன் என்பவர் நேற்று இரவு ஒரு மொபட்டில் அந்த வழியாக வந்தார். அப்போது அப்பகுதியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் மேடை மீது மொபட் மோதியது. இதில் மொபட் மேடையின் அடிபகுதிக்கு சென்றது. கணேசன் படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு புலிவலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து புலிவலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் போலீசார் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரையும், சாலையில் மேடை அமைத்ததை கண்டித்தும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் துறையூர் போலீசார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த இனி அனுமதி அளிக்கப்படாது, என்று போலீசார் கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது விபத்து நடந்த அதே இடத்தில் சில மாதங்களுக்கும் முன்பு ஒரு பொதுக்கூட்டத்துக்காக மேடை அமைக்கப்பட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்