கலெக்டர் அலுவலகத்தில் : அ.தி.மு.க. பெண் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-12 22:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள், கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த பொதுமக்களை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட நுழைவுவாயில் மற்றும் வளாகங்களில் போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இந்த தீவிர சோதனையையும் மீறி மதியம் 12.30 மணியளவில் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூரை சேர்ந்த ஏழுமலையின் மனைவியான அ.தி.மு.க. மகளிர் அணி ஒன்றிய துணை செயலாளர் சாந்தி (வயது 43) என்பவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்து தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று சாந்தியை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் ஆமூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் வீடு கட்டி கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த 3 பேர், என்னிடம் வந்து வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுபற்றி நான் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 3 பேர் மீதும், நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை கேட்டறிந்த போலீ சார், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத் தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்