குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

அரியலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-11-12 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 336 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் செந்துறையை சேர்ந்த முஸ்லிம்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 6 ஆண்டுகளாக காத்திருக்கும் முஸ்லிம்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வண்ணம் புத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், வண்ணம் புத்தூர் கிராம அர்ஜனதெருவில் 1977-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் 20 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. 20 குடும்பங்கள் தற்போது 47 குடும்பங்களாக அதிகரித்து 200 நபர்கள் அதே 20 வீடுகளில் வசித்து வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் வீடுகள் கடுமையாக சேதமடைந்தும் உள்ளன. எனவே எங்களுக்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அம்பாபூர் ஊராட்சியில் உள்ள கீழநத்தம் காலனி தெருவில் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கோவில் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் இடத்தை காலி செய்து தர வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு குடியிருக்க சொந்த வீடோ, இடமோ இல்லாததால், தாங்கள் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி 100-க்கும் மேற்பட்டோர் தனித்தனியாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பினனர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு தலா ரூ.5,250 வீதம் ரூ.57 ஆயிரத்து 750 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்