ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு: திண்டுக்கல் கோர்ட்டில் 7 மாவோயிஸ்டுகள் ஆஜர் - ‘சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம்’ என கோஷமிட்டதால் பரபரப்பு

கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் மாவோயிஸ்டுகள் 7 பேர் நேற்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீசார் அழைத்து வந்தபோது, சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-12 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி வனப்பகுதியில், கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து, தப்பியோடிய மாவோயிஸ்டுகள் கண்ணன், பகத்சிங், நீலமேகம், ரஞ்சித், ரீனாஜாய்ஸ் மேரி, செண்பகவல்லி, காளிதாஸ் என அனைவரும் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இதில், ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். மற்ற அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனால், சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜாமீனில் உள்ள ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜரானார்கள்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டார். பின்னர் மாவோயிஸ்டுகளை சிறைகளில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். மாவோயிஸ்டுகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோதும், ஆஜர்படுத்திவிட்டு வெளியே வரும்போது அவர்கள் திடீரென கோஷமிட்டனர்.

அப்போது, சத்தீஷ்கார் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களை புறக்கணிப்போம், அரசு துறைகள் பலவற்றை தகர்த்திடுவோம், மக்கள் புரட்சி வெல்லட்டும், நக்சல் வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்