பாளையங்கோட்டையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு இலவச பயிற்சி நாளை தொடங்குகிறது

பாளையங்கோட்டையில் இந்திய விமானப்படைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதற்கான இலவச பயிற்சி நெல்லையில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

Update: 2018-11-12 22:30 GMT
நெல்லை,

இதுகுறித்து நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாயம் அந்தோணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


இந்திய விமானப்படையின் ஏர்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) இரண்டாம் வாரத்தில் பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இந்த முகாமில் 14.7.1998 முதல் 26.6.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு சலுகை கிடையாது. இந்த தேர்வுக்கு கல்வித்தகுதியாக பிளஸ்-2 தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலப் பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.21 ஆயிரத்து 700 மற்றும் இதரப்படிகளும் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.14 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உடற்தகுதி தேர்வில் 1.6 கி.மீ தூரத்தை 5 நிமிடங்கள் 40 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். மேலும் சில உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும்.

இந்த ஏர்மேன் தேர்வு முகாமில் கலந்து கொள்ள முன்னரே விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.ai-r-m-e-ns-e-l-e-ct-i-on.gov.in அல்லது www.ai-r-m-e-ns-e-l-e-ct-i-on.cd-ac.in இணையதள முகவரியை பார்க்கலாம்.

மேலும் தமிழ்நாடு வனசீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் தமிழ்நாடு வனத்துறையில் வனவர், வனக்காப்பாளர் போன்ற பதவிகளுக்கு எழுத்துத்தேர்வின் மூலம் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி, வயது வரம்பு, முன்னுரிமை போன்ற விவரங்களை www.fo-rests.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்காணும் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) முதல் (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களை அறிய 0462-2500103 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்