கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-12 23:00 GMT

மதுரை,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளுக்கு இணையதள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட இடமாறுதலுக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதை செய்யாதபட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, ஏற்கனவே கணினி மூலம் அடங்கல் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதை புறக்கணிப்பது, மடிக்கணினிகளை ஒப்படைத்துவிட்டு மாநிலம் தழுவிய ஒருநாள் விடுப்பு எடுப்பது, கூடுதல் பொறுப்புகளாக கிராம கணக்குகளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவது என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று ஒவ்வொரு தாலுகா அளவிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு தாலுகா முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உட்பிரிவு பட்டா மாறுதல், மாவட்ட இடமாறுதல், இணையதள வசதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட செயலாளர் ராஜாமணி தலைமையில் வடக்கு வட்ட பொறுப்பாளர்கள் மாரியப்பன், மோகன்குமரன், முத்துபாண்டி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ்குமார், தங்கப்பாண்டி, கோதைநாச்சியார், சரவணகுமார், சுரேஷ் உள்பட 60–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்