வேடசந்தூரில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து கைவரிசை: வேளாண்மை அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

வேடசந்தூரில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து வேளாண்மை அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகள் திருடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-11-12 22:45 GMT
வேடசந்தூர், 

வேடசந்தூர் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் வேளாண்மைத்துறையில் விதை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா. இவர், ஆர்.எச்.காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல், 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர்.

இதற்கிடையே மாலை 3 மணி அளவில் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர், சகுந்தலாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சகுந்தலா வீட்டுக்கு வந்து பார்த்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்த 2 பீரோக்களை திறந்து பார்த்தார்.

அப்போது ஒரு பீரோவில் இருந்த தங்க சங்கிலிகள், மோதிரங்கள், கம்மல் என 20 பவுன் நகைகளை காணவில்லை. அதேநேரம் மற்றொரு பீரோவில் வைக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் அப்படியே இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி மதியவேளையில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடியது தெரியவந்தது. ஆனால், மற்றொரு பீரோவில் இருந்த பணத்தை பார்க்காமல் சென்றதால் அது தப்பியது.

அதேபோல் மற்றொரு வீட்டிலும் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். திருட்டு நடந்த ராதாகிருஷ்ணனின் எதிர்வீட்டில் வசிப்பவர் மாரிமுத்து. இவருடைய மனைவி முத்துவேலம்மாள் மாரப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். காலையில் முத்துவேலம்மாள் வேலைக்கு சென்றுவிட, மாரிமுத்துவும் வெளியே சென்று விட்டார். அதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால், வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த போலீஸ் ஏட்டு ரத்தினகிரி. இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் கூத்தாங்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். 2 பேரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், நேற்று அவருடைய வீட்டிலும் பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால், நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்