‘கஜா’ புயல் நெருங்குவதால்- மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் - கடலூர் கலெக்டர் எச்சரிக்கை

‘கஜா’ புயல் நெருங்குவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-11-12 22:00 GMT
கடலூர், 

வங்க கடல் பகுதியில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கஜா புயல் உருவாகி உள்ளது. இப்புயலானது நாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை(புதன்கிழமை) அல்லது நாளைமறுநாள்(15-ந்தேதி) கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

எனவே கடலூர் மாவட்ட மீனவர்கள் அனைவரும் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தால் உடனடியாக அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் எந்திரங்களை கடற்கரை, மீன்பிடி இறங்கு தளம், மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். மேலும் கடற்கரையில் உள்ள கண்ணாடி நாரிழை படகுகள், கட்டுமரங்கள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக உயரமான இடங்களில் வைத்திட வேண்டும். இயற்கை இடர்பாடு தொடர்பான தகவல்களை கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம்(04142-238170) மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்