‘கஜா’ புயல் எதிரொலி: 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வங்கக்கடலில் ‘கஜா’ புயல் உருவாகி இருப்பதால் காரைக்காலில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Update: 2018-11-12 22:45 GMT
காரைக்கால்,

தென் கிழக்கு வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி(வியாழக்கிழமை) முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும். புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையொட்டி, நேற்று காரைக்காலில் உள்ள தனியார்(மார்க்) துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் காரணமாக காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை, மீனவர்களை கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும், கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்பவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும், மீன்பிடிக்க சென்றவர்களும் கரை திரும்பி வந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்