வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து 6 பவுன் நகைக்காக விஷம் கொடுத்து பெண் கொலை

திருவாரூர் அருகே வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து வீட்டின் உரிமையாளருக்கும், அவரது மனைவிக்கும் விஷம் கொடுத்து 6 பவுன் நகையை திருடி சென்ற கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். விஷம் அருந்திய தம்பதியரில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-11-13 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் ஊராட்சி விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை(வயது 65). இவருடைய மனைவி சகுந்தலா (62). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இதனால் செல்லப்பிள்ளையும், சகுந்தலாவும் மட்டும் அங்கு வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு வேண்டும் என்று கணவன்-மனைவி போல் வந்த ஒரு தம்பதியினர் வந்து விவரங்களை கேட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே தம்பதியினர் மீண்டும் செல்லப்பிள்ளையின் வீட்டுக்கு வந்து மேல் பகுதியை வாடகைக்கு கேட்டு வந்துள்ளனர். அப்போது வீட்டில் மூட்டு வலி காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சகுந்தலா படுத்திருந்தார். அதைப்பார்த்த அந்த தம்பதியினர், அதற்காக மருந்து தன்னிடம் இருப்பதாக கூறி தங்களிடம் இருந்த விஷத்தை சகுந்தலாவிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய சகுந்தலா அதை வாங்கி குடித்துள்ளார். மேலும் உடலுக்கு நல்லது என கூறி செல்லப்பிள்ளைக்கும் கொடுத்து அதனை குடிக்க வைத்துள்ளனர்.

அதை வாங்கி குடித்த சில நிமிடங்களிலேயே தம்பதியினர் இருவரும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து தயாராக இருந்த தம்பதியினர், சகுந்தலா கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு வந்து பார்த்த போது செல்லப்பிள்ளையும், சகுந்தலாவும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். செல்லப்பிள்ளையை எழுப்பி விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அவர் தெரிவித்தார். இதனையடுத்து தம்பதியர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள செல்லப்பிள்ளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை திருடுவதற்காக மருந்து என்ற பெயரில் அவர்கள் விஷம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியினருக்கு விஷம் கொடுத்து நகையை திருடி சென்ற தம்பதியினரை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து 6 பவுன் நகைக்காக விஷம் கொடுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்