இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய உதவும் செல்போன் செயலி - பொதுமக்கள் பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் செல்போன் செயலியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-11-13 23:30 GMT
தேனி,

தாய்லாந்தில் உள்ள ஆசிய மண்டலத்தின் ஒருங்கிணைந்த பல்வகை பேரிடர் முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்து பல்வகை பேரிடர்களின் அதீத தாக்கத்தினை முன்னதாக அறிந்து அவசர முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் இணையதள புவியியல் தகவல் முறை அமைப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த அமைப்பின் நவீன தொழில் நுட்பங்களின் மூலம் முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் அபாய தணிப்பு நடவடிக்கைகளுக்கான தகவல்களை சேகரித்தல், ஆவணப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளை செய்ய இயலும். இதன் தொடர்ச்சியாக ‘டி.என்.-ஸ்மார்ட்’ ( TN&SM-A-RT ) என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

‘டி.என்.-ஸ்மார்ட்’ செயலியை ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில், செல்போன் எண், பயனர்பெயர், கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி, இருப்பிடம் குறித்த விவரங்களை பதிவு செய்து புதிதாக பயனர் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். பின்னர், பயனர்பெயர், கடவுச்சொல் மூலம் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

இதன்மூலம், பேரிடர் குறித்த தகவல்கள், முன்னெச்சரிக்கைகள், மழைப்பொழிவின் அளவு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் அறிய இயலும். மேலும், இருப்பிட அடிப்படையிலான உத்தேச மழையளவு, வெள்ள அபாயம் குறித்த முன்கணிப்பு, வெள்ளத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த தகவல்கள் போன்றவற்றை இச்செயலி மூலம் பெற முடியும்.

இந்த செயலியானது தனிப்பட்ட எச்சரிக்கை ஒலியமைப்பு முறையை கொண்டது. இதனால் சுனாமி, புயல் போன்ற பேரிடர்களின் போது, அமைதி நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் கைப்பேசியில் இருந்து கூட எச்சரிக்கை ஒலியுடன் செய்தியை பெற முடியும். எச்சரிக்கை ஒலியானது, செய்தியை பயனாளர்கள் பார்த்த பின்பு தான் நிற்கும்.

இந்த செயலி, முன்னறிவிப்பு தகவல்களை அளிப்பதோடு மட்டுமின்றி, பொதுமக்களிடம் இருந்து வரும் அவசர உதவி அழைப்புகளையும் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கும். இதன் மூலம், அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை கண்காணிக்க உயர் அலுவலர்களுக்கு உதவும்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஆயத்த பணிகள், மீட்பு, நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிக்க இந்த செயலி உதவியாக இருந்து வருகிறது. எனவே, இதை பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் தங்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்