மந்தைவெளியில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரத்தை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மந்தைவெளி பஸ் பணிமனை அருகே ஆர்.கே.மட் ரோட்டில் ஒரு தனியார் கிளனிக் எதிரே சாலையோரம் மரம் ஒன்று சாலையை நோக்கி குறுக்கே வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

Update: 2018-11-13 22:45 GMT
அடையாறு,

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் கால்வாய் பணிக்காக இந்த மரத்தையொட்டி பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த மரத்தின் வேர் பூமியில் நேராக பதியாமல், பக்கவாட்டில் வளைந்து வளர்ந்து செல்வது தெரிந்தது.

தற்போது, மழை நீர் வடிகால் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டி அந்த பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த மரத்தின் வேர்கள் எந்த பிடிப்பும் இன்றி அந்தரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த மரம் தற்போது வலுவிழந்த நிலையில் உள்ளது. இந்த சாலையில் நாள்தோரும் இருசக்கர வாகனம், கார், பஸ் என அனைத்து வித வாகனங்களும் சென்று வருகிறது. இதனால் சாலையில் ஏற்படும் அதிர்வால் பாதிக்கப்படும் இந்த மரத்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராநிலையில் இந்த மரம் விழுந்தால் சாலையில் செல்வோரின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படுவதுடன் இந்த மரத்தின் இருபுறமும் உள்ள கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இது பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், வேர்கள் எந்த பிடிப்பும் இன்றி அந்தரத்தில் செல்லும் இந்த மரத்தால் ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இந்த மரத்தை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்