கடந்த 10 மாதத்தில் 109 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 109 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என சைல்டுலைன் அமைப்பினர் தெரிவித்தனர்.

Update: 2018-11-13 22:45 GMT
திருப்பூர்,

சைல்டுலைன் 1098 என்பது குழந்தைகளுக்கென பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வரும் சேவையாகும்.

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மறுவாழ்விற்காகவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சைல்டுலைன் அமைப்பு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சைல்டுலைனின் கூட்டு நிறுவனமாகவும், மரியாலயா நோடல் நிறுவனமாகவும் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி திருப்பூர் சைல்டுலைன் அமைப்பின் இயக்குனர் லூர்து சகாயம் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள சைல்டுலைன் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூரில் செயல்பட்டு வரும் சைல்டுலைன் அமைப்பை கடந்த 10 மாதத்தில் 1306 பேர் தொடர்புகொண்டுள்ளனர். இதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 5 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 109 குழந்தை திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் காங்கேயம் பகுதியில் தான் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெற இருந்தது.

மேலும், குழந்தை தொழிலாளர்கள் 72 பேரும், சாலைகளில் பிச்சை எடுத்த 51 பேரும், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் 74 பேரும், வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் 57 பேர் உள்பட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 1306 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சைல்டுலைன் அமைப்பினர் சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி இந்த வாரம் சைல்டுலைன் நண்பர்கள் வாரம் என கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை திருப்பூர் மாநகரில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோல் பொங்கலூர், குண்டடம், உடுமலை, முதலிபாளையம், பல்லடம், திருப்பூர் ராயபுரம், காந்திநகர், ரெயில்நிலையம், அவினாசி என வருகிற 19-ந் தேதி வரை இந்த பகுதிகளில் விழிப்புணர்வு நாடகங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மைய திட்ட மேலாளர் பாஸ்கர், மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் உள்பட பலர் கொண்டனர்.

மேலும் செய்திகள்