‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி

‘ஹண்டா-ஹெண்டத்தி’ படப்பிடிப்பின்போது தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதாக நடிகை சஞ்சனா கல்ராணி ‘மீ டூ’ மூலம் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அவர் படத்தின் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Update: 2018-11-13 23:37 GMT
பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம்(அக்டோபர்) சஞ்சனா கல்ராணி ‘மீ டூ’ மூலம் இயக்குனர் ரவிஸ்ரீவத்சா மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

அந்த பதிவில், ‘ஹண்டா-ஹெண்டத்தி படப்பிடிப்பின்ேபாது எனக்கு 15 வயது. பாங்காக்கில் நடந்த படப்பிடிப்பின்ேபாது 50-க்கும் அதிக முறை முத்தக்காட்சிகள் படமாக்கப்பட்டன’ என்று தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கன்னட திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக நடிகர் சங்கம், இயக்குனர் சங்கத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை இயக்குனார் ரவிஸ்ரீவத்சா மறுத்தார்.

இந்த நிலையில், நேற்று நடிகை சஞ்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் நடிகை சஞ்சனா கூறியதாவது:-

நான் எனது அனுபவம் மற்றும் வாழ்க்கையில் நடந்த உண்மையை ‘மீ டூ’ பதிவில் கூறினேன். ‘ஹண்டா-ஹெண்டத்தி’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை அந்த சமயத்திலேயே வெளிப்படுத்த என்னால் முடியவில்லை. ஏனென்றால் அப்போது எனக்கு சிறிய வயது. எனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை ‘மீ டூ’ மூலம் வெளிப்படுத்தினேன். இதன்மூலம் படத்தின் இயக்குனர் மற்றும் இயக்குனர் சங்கத்துக்கு களங்கம் உருவாகி உள்ளது. யாருடைய பெயருக்காவது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அம்பரீஷ், தொட்டண்ணா மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் என்னிடம் பேசினர். அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ‘ஹண்டா-ஹெண்டத்தி’ பட இயக்குனர், படக்குழு, இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், கர்நாடக வர்த்தக சபையினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்