சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-14 21:30 GMT
சுரண்டை, 

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம் 

சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தில் தனியார் பீடி நிறுவனம் உள்ளது. இங்கு 1600–க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 2–ந் தேதி சம்பள பணம், அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் 10 நாட்களுக்கு மேலாகியும் சம்பள பணம் வரவு வைக்கப்படவில்லை.

இதுதொடர்பாக பீடி நிறுவனத்திடம் கேட்டபோது, தவறுதலாக ஆலங்குளம் கிளையை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு சம்பள பணம் வரவு வைக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் பேசி சம்பள பணம் பெற்றுத்தரப்படும் என்றனர். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு, நிலுவை தொகை வழங்கப்பட்டதாக கூறி, அந்த பணத்தை செலவழித்து விட்டதாக தெரிவித்தனர். சம்பள பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த சிவகுருநாதபுரம் கிளையை சேர்ந்த பீடி சுற்றும் பெண்கள், நேற்று அந்த பீடி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை 

மாவட்ட பீடி தொழிலாளர் சங்க தலைவர் ராஜாங்கம் தலைமையில் சுரண்டை வட்டார நிர்வாகிகள் ஆரியமுல்லை, தர்மகனி, பொட்டு செல்வம், முத்துலட்சுமி, லலிதாதேவி ஆகியோர் முன்னிலையில் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் பீடி நிறுவன நிர்வாகிகள் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்னும் ஓரிரு நாட்களில் சம்பள பணத்தை வழங்கிவிடுவதாக கூறியதை தொடர்ந்து, பெண்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்