சானமாவு வனப்பகுதியில் உள்ள 40 காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

சானமாவு வனப்பகுதியில் உள்ள 40 காட்டு யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-11-14 22:30 GMT
ஓசூர், 

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு 40 காட்டு யானைகள் வந்தன. இவைகள் பல குழுக்களாக சானமவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் சானமாவு வனப்பகுதியில் உள்ள 40 காட்டு யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டி வருகின்றனர். எனவே வனப்பகுதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்க விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்