ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் கிராம மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இறந்தவர்களின் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-11-14 23:00 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது வடதில்லை கிராமம். இங்கு 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் யாராவது இறந்து விட்டால் 1 கிலோ மீட்டர் து£ரத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் கிராமத்தில் இருந்து சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை இல்லை. இந்த நிலையில் யாராவது இயற்கை எய்தினால் உடலை வயல்வெளி வழியாக சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டிஉள்ளது. இப்படி வயல் வழியாக உடலை எடுத்து செல்லும்போது விவசாயிகள் ஆட்சேபனை தெரிவிப்பதால் அடிக்கடி தகராறு நடந்து வருகிறது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க சுடுகாட்டுக்கு தனி பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றி நகல்களை பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடதில்லை கிராம தி.மு.க. கிளை தலைவர் ராஜா நோய்வாய்பட்டு நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது. இதற்காக உடலை வயல் வழியாக கொண்டு சென்ற போது விவசாயிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் உடலை வயல் வழியாக கொண்டு சென்றனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க வடதில்லை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை அமைத்து தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதே போன்று அருகே உள்ள உப்பரபாளையம் கிராமத்தில் கூட சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை இல்லை. இந்த கிராமத்தில் யாராவது இறந்து போனால் வயல் வழியாகதான் சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டி உள்ளது. ஆகையால் எங்கள் கிராமத்திலும் சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை அமைத்து தர அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உப்பரபாளையம் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்