நாட்டுக்கோழி வளர்க்க 100 சதவீத மானியம் - பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நாட்டுக்கோழி வளர்க்க பெண்களுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

Update: 2018-11-14 23:00 GMT
தேனி,

நாட்டுக்கோழி வளர்க்க பெண்களுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராமப்புறங்களில் வாழும் ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், நாட்டுக்கோழி வளர்க்க தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது. இதற்காக, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 200 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும். 4 வார வயதுடைய 50 அசில் ரக நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் கோழி வளர்க்கும் கொடாப்பு எனப்படும் கூண்டுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 200 பெண் பயனாளிகள் வீதம் மொத்தம் 1,600 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெண்கள் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் வழங்கும் திட்டங்களில் பயன் அடையாதவராக இருத்தல் வேண்டும்.

விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்கள் 30 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி டாக்டர்களிடம் வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்