மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கபிஸ்தலம் அருகே மதுக்கடை விற்பனையாளர்களை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-11-14 22:46 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு வடசருக்கை கிராமத்தை சேர்ந்த அரிச்சந்திரன், பழனிசாமி ஆகிய இருவரும் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு மதுபானம் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் ‘டேங்க்’ கவரில் ஒரு பையில் பணம் வைக்கப்பட்டிருந்தது. கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அரிச்சந்திரன், பழனிசாமி ஆகியோரை வழிமறித்தனர்.

பின்னர் மர்ம நபர்கள், அரிச்சந்திரன், பழனிசாமி ஆகியோரை தாக்கி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி அவர்களது மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற பையில் ளிடம் இருந்த ரூ.3 லட்சம் இருந்தது.

இதுகுறித்து அரிச்சந்திரன், பழனிசாமி ஆகிய இருவரும் உடனடியாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், நாகராஜ் மற்றும் போலீசார் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்