கோவில்பட்டியில் பரபரப்பு: டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.55 ஆயிரம் கொள்ளை 4 மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கோவில்பட்டியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-11-15 22:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு நடு தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 38). இவர் கோவில்பட்டி-இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் காட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

அந்த கடையில் விற்பனையாளராக எட்டயபுரம் உமறுபுலவர் தெருவைச் சேர்ந்த குணாநிதி (43) பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மது விற்பனையை முடித்து கொண்டு, கடையை பூட்டி விட்டு, தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.

டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.55 ஆயிரத்து 10-ஐ மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக வேல்முருகன் எடுத்துச்சென்றார். குணாநிதியை கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதற்காக, வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். டாஸ்மாக் கடையில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் காட்டு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களுடன் நின்று கொண்டிருந்த 4 மர்மநபர்கள் திடீரென்று வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்களில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தும், மற்ற 2 பேர் துணியால் முகத்தை மறைத்தும் இருந்தனர்.

அவர்கள் அரிவாளைக் காண்பித்து வேல்முருகனிடம் பணத்தை தருமாறு மிரட்டினர். ஆனாலும் அவர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 4 மர்மநபர்களும் சேர்ந்து வேல்முருகன், குணாநிதியை தாக்கினர். இதில் வேல்முருகன் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர்கள், வேல்முருகனிடம் இருந்த ரூ.55 ஆயிரத்து 10-ஐ கொள்ளையடித்தனர். மேலும் அவர்களின் செல்போன்களையும் பறித்து கொண்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து வேல்முருகன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டெல்லா பாய், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த வேல்முருகன், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குணாநிதி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி, பணத்தை பறித்த 4 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்