பாலியல் கொடுமைகள் குறித்து பெண்கள் புகார் செய்ய 24 மணி நேர உதவி மையம் கோவையில் விரைவில் தொடக்கம்

பாலியல் கொடுமைகள் குறித்து பெண்கள் புகார் செய்ய 24 மணி நேர இலவச உதவி மையம் கோவையில் விரைவில் தொடங்கப்படுகிறது.

Update: 2018-11-15 22:15 GMT
கோவை,

தமிழகத்தில் குழந்தைகள் உதவி மையத்தின் இலவச தொலைபேசி எண் 1098. இந்த எண்ணுக்கு அழைத்தால் அது சென்னை சென்று அங்கிருந்து எந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைக்கு உதவி தேவையோ அந்த மாவட்டத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அதேபோல தற்போது பெண்களுக்கு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பாலியல் உள்ளிட்ட கொடுமைகள் நேர்ந்தால் அது குறித்து புகார் செய்ய 181 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 24 மணி நேர உதவி மையத்தை மத்திய அரசு விரைவில் அமைக்க உள்ளது. தமிழக அரசு மூலம் மத்திய அரசு அமல்படுத்த உள்ள இந்த உதவி மையம் முதல் கட்டமாக கோவை, சென்னை, காஞ்சீபுரம், சேலம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் விரைவில் அமைக்கப்படுகிறது.

பெண்கள் உதவி கேட்டு அந்த மையத்துக்கு 181 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் அது சென்னை சென்று எந்த மாவட்டத்தில் உள்ள பெண்ணுக்கு உதவி தேவை யோ அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள மையத்துக்கு தெரிவிக்கப்படும். உடனே அந்த மையத்தில் இருப்பவர்கள் உடனடியாக உதவி கேட்டு அழைத்த பெண் இருக்கும் இடத்துக்கு சென்று உதவி செய்வார்கள்.

பாலியல் உள்பட பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களை உதவி மையத்துக்கு அழைத்து வந்து 4 அல்லது 5 நாட்கள் மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை வழங்கப்படும். அதன்பின்னர் அந்த பெண் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் இதற்கான அலுவலகம் பூ மார்க்கெட் அருகில் உள்ள சமூக நல அலுவலகத்தில் அமைக்கப்படும். அங்கு 4 பேர் கொண்ட குழு செயல்படும். அவர்கள், 24 மணி நேரமும் உதவி செய்ய தயார் நிலையில் இருப்பார்கள்.

இந்த உதவி மையம் குறித்து கடந்த 2 மாதமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவையில் இந்த மையம் இந்த மாத இறுதியில் தொ டங்கப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்