சிலைகள் ஆய்வு குறித்த அறிக்கை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் தொல்லியல் துறை அதிகாரி பேட்டி

சிலைகள் ஆய்வு குறித்த அறிக்கை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என திருவாரூரில் தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் கூறினார்.

Update: 2018-11-15 23:00 GMT
திருவாரூர்,

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், தொல்லியல் துறையினர் தமிழக கோவில்களில் உள்ள சிலைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் சிலைகள் உண்மையான சிலைகளா? போலி சிலைகளா? உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாரூர் தியாகராஜர் கோவில் சிலை பாதுகாப்பு மையத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 2 கட்டங்களாக ஆய்வு நடந்தது. 3-வது கட்டமாக ஆய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆய்வில் 12 கோவில்களுக்கு சொந்தமான 111 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

நேற்று 2-வது நாளாக நடைபெற்ற ஆய்வில் மன்னார்குடி, திருமக்கோட்டை, பரவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு பணிகளை பார்வையிட்ட தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் உள்ள கோவில் சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும்.

திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளதால் எத்தனை நாட்கள் ஆய்வு நீடிக்கும்? என்பதை கூற இயலாது. சிலை ஆய்வு பணியின்போது கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக ஆய்வு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்