மாமல்லபுரம் கடற்கரை ஓர கிராமங்களில் கலெக்டர், பேரிடர் மேலாண்மை அதிகாரி ஆய்வு

கஜா புயலையொட்டி மாமல்லபுரம் கடற்கரை ஓர மீனவ கிராமங்களில் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, பேரிடர் மேலாண்மை அதிகாரி அமுதா ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-11-15 22:45 GMT
மாமல்லபுரம்,

கஜா புயலையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை கடற்கரை ஓர பகுதிகளான கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி, நெம்மேலி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பேரிடர் மேலாண்மை அதிகாரி அமுதா ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தி பார்வையிட்டனர்.

பொதுமக்கள் தங்குவதற்குரிய இடங்கள், புயல் பாதிப்பு ஏற்பட்டால் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் அதிகாரி அமுதா நிருபர்களிடம் கூறியதாவது:- காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடற்கரை ஓர மீனவ கிராமங்களில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை கண்காணிக்க பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மின் கம்பங்கள், மரங்கள் விழுந்தால் அவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்குவதற்குரிய இடங்கள், அவர்களுக்கு தேவையான உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டருடன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, பரிமளா, அ.தி.மு.க. நகர செயலாளர் கணேசன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் நாராயணன், கொக்கிலமேடு ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் குணசேகரன், ஊராட்சி செயலாளர் கருணாகரன் உள்பட பலர் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்