விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா

மங்கலம் அருகே விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-15 22:45 GMT
மங்கலம்,

மங்கலத்தை அடுத்த பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பரமசிவம் (வயது 65), சண்முகசுந்தரம் (50). இவர்கள் அந்த பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் மானாவாரி பயிர்கள், காய்கறி செடிகளை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை பரமசிவம், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான விளை நிலத்தில் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் விளை நிலங்களில் அதிகாரிகள் அளவீடு செய்வதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டனர். விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏர்முனை இயக்க நிர்வாகி சுரேஷ் தலைமையில் விவசாயிகள் அந்த பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் ‘வருவாய்த்துறை அதிகாரிகள் வரும் வரை இடத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம்’ என்று கூறினார்கள். பின்பு சம்பவ இடத்திற்கு பல்லடம் தாசில்தார் அருணா வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயர் மின்அழுத்த கம்பிகளை நெடுஞ்சாலையோரம் பூமிக்கு அடியில் புதைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

இதற்கு தாசில்தார், ‘இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து முறையிடுங்கள். அதுவரை உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்’ என்று விவசாயிகளிடம் கூறினார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்