ஏர்வாடி அருகே சூறைக்காற்றில் 30 ஆயிரம் வாழைகள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஏர்வாடி அருகே வீசிய சூறைக்காற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-16 22:30 GMT
ஏர்வாடி, 

ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கல்லாம்பாறை, கொடுமுடியாறு அணை பகுதி, ராஜபுதூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ஏத்தன், ரசகதலி, கற்பகவள்ளி, பேயன் ஆகிய வகைகளை சேர்ந்த வாழைகளை ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதிகளில் நேற்று திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது.

இதனால் குலை தள்ளிய நிலையில் இருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசமானது. இதனால் வாழை விவசாயிகள் மிகவும் வேதனையடைந்து உள்ளனர். மொத்தத்தில் ரூ.70 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சூறைக்காற்றில் சாய்ந்து சேதமடைந்த வாழைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஒரு வாழைக்கு ரூ.100 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் வீசிய சூறாவளி காற்றில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்