ஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

Update: 2018-11-16 23:15 GMT
ஓமலூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் சேலம் புறநகர் மற்றும் மாநகர நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள ஓமலூர் கட்சி அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் முதலில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடனும், தொடர்ந்து புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், 200 வாக்காளர்களுக்கு 6 பேர் வீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

மேலும் அந்தந்த கிராமங்களுக்கே சென்று உள்ளூர் கட்சி நிர்வாகிகளை வைத்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேலம் எம்.பி. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், செம்மலை, ராஜா, மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன் (காடையாம்பட்டி), அசோகன் (ஓமலூர் வடக்கு), பச்சியப்பன் (ஓமலூர் தெற்கு), சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, கூட்டுறவு சங்க தலைவர்கள் துரைராஜ், ராம்ராஜ், கே.சி.செல்வராஜ், பெரியபுதூர் கண்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் வெளியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்