அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் - ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலோசனை

சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Update: 2018-11-17 22:30 GMT
உத்தமபாளையம்,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் தமிழ் மாதம் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி கார்த்திகை முதல் நாளான நேற்று அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், தேனி மாவட்டத்தின் வழியாகவே சபரிமலைக்கு பஸ், வேன், கார் மற்றும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. வைத்தியநாதன் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கம்பம், கூடலூர் நகராட்சி அலுவலர்கள், போலீசார், வனத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அய்யப்ப சேவா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குமுளி மலைப்பாதையில் இருபுறத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை அகற்றுவது, குமுளி பஸ்நிலையத்தில் சுகாதார பணி மேற்கொள்வது, பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளை தினமும் சுத்தம் செய்வது, தேனி மாவட்ட எல்லையில் இருந்து குமுளி வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது, பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்குவது, பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் இருந்து அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் போக்குவரத்தை மாற்றி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி தேனியில் இருந்து கேரள மாநிலம் சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாகவும், சபரிமலையில் இருந்து தமிழகம் வருகிற வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாகவும் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்