நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையும் கனிமொழி எம்.பி. பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகவும் பலமான கூட்டணி அமையும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2018-11-17 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினார். அப்போது கனிமொழி எம்.பி. முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று கனிமொழி எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், மனோதங்கராஜ் (மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்), நகர செயலாளர் மகேஷ், மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும். ஏராளமான விவசாய நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. தென்னை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியை அரசு முடுக்கிவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசு சரியான நிதியை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருவதாக கூறுகிறீர்கள். தற்போது ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசுக்கு வழங்க நிச்சயமாக ஒரு எம்.பி. என்ற முறையில் நாடாளுமன்றத்தில் நான் வலியுறுத்துவேன். கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார். அவருடைய அறிவுரைகளின்படி நிச்சயமாக இதற்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும்.

ஆனால் இந்த கன்னியாகுமரி தொகுதியிலேயே ஒரு மத்திய மந்திரி இருக்கிறார். அவர் நினைத்தால் நிச்சயமாக தமிழகத்துக்கு நியாயமான இழப்பீட்டை வாங்கித்தர முடியும். இதுவரை அவர் வாங்கித்தரவில்லை என்றாலும், இனிமேலாவது வாங்கித்தர வேண்டும். அதையாவது அவர் செய்ய வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று தம்பித்துரை கூறி வருவதாக சொல்கிறீர்கள். அவர் மட்டுமல்ல, தி.மு.க.வும், மு.க.ஸ்டாலினும் இதே குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி, வலியுறுத்தி வருகிறார்கள். கேட்கக்கூடிய தொகையைவிட குறைவான தொகைதான் மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் ஒரு பாதிப்பு வரும்போது அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களைக் காட்டிலும், தமிழகத்துக்கு வழங்கப்படும் நிவாரணம் குறைந்த அளவாகவே உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து நிதியை கேட்டு வாங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜனதா அரசுக்கு இணக்கமாக உள்ள ஒரு அரசாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது அவர்கள்தான் தேவையான நிதியை கேட்டுப்பெற வேண்டும். பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் அமைந்து வரும் கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் பலமான கூட்டணியாக இருக்கும்.

பா.ஜனதா ஆட்சியாளர்களின் தலையீடு சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தலையிட்டு தங்களது அரசியலை நுழைக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அதேபோல் ஊடகத்துறையிலும் ஊடக சுதந்திரத்தில் அவர்களது தலையீடு எந்த அளவுக்கு இருந்து வருகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இப்படிப்பட்ட ஒரு சூழலை எத்தனை காலம் பொறுமையாக, அமைதியாக ஏற்றுக்கொள்வது?

புயல் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போன்ற அமைச்சர்களிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. அவர் மேடைகளில் எப்படி, எப்படி பேசியிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். கட்சி தலைவியாக இருந்தவரையே கொச்சைப்படுத்தி பேசக்கூடியவர் அவர். அதனால் அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

மேலும் செய்திகள்