கொடைக்கானலில் ‘கஜா’ புயலால் பலத்த மழை: மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி

கொடைக்கானலில், மண்சரிவில் சிக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-17 23:15 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானலில், கட்டிட வேலைக்கு வந்த இடத்தில் மண்சரிவில் சிக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தமிழகத்தில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை தாக்கிய ‘கஜா’ புயல் திண்டுக்கல், கொடைக்கானல் வழியாக கேரளாவுக்கு நகர்ந்து சென்றது. குறிப்பாக திண்டுக்கல், கொடைக்கானலை “கஜா” புயல் புரட்டி போட்டது. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.

மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இன்னும் 3 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில் புயல் தாக்கியபோது கார் மீது மரம் விழுந்து கேரள பெண் நீமிலா (வயது 25) என்பவர் இறந்து போனார்.

இந்த சோகம் அடங்குவதற்குள் கொடைக்கானலில் மண்சரிவில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-

கொடைக்கானலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சின்னப்பள்ளம் பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு சேலம் அண்ணாநகரை சேர்ந்த வெங்கடாசலம் என்ற ரவி (52), ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), கார்த்திக் (21), ஓமலூர் தளவாய்பட்டியை சேர்ந்த சவுந்தர்ராஜ் (46) ஆகிய 4 பேர், கட்டிட வேலைக்காக வந்தனர்.

இதற்காக அவர்கள் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் தகரத்தால் ஷெட் அமைத்து கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் ‘கஜா’ புயலின்போது கொடைக்கானலில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அவர்கள் தங்கள் ஷெட்டில் தங்கியிருந்தனர்.

அப்போது திடீரென அந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இடி விழுந்தது போல் பலத்த சத்தத்துடன் ஷெட்டின் மீது மண்சரிந்து விழுந்தது. இதில் ஷெட் முழுவதும் மண்ணுக்குள் புதைந்தது. அங்கு தங்கியிருந்த 4 பேரும் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர். ஆனால் மழை பெய்து கொண்டே இருந்ததால் அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை.

இதனால் மண்சரிவு ஏற்பட்டது குறித்து யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை மழை ஓய்ந்ததை தொடர்ந்து பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த ஷெட் மீது மண்சரிவு ஏற்பட்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒருவரின் தலை மற்றும் உடல் வெளியே தெரிந்தது. இதையொட்டி அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் கொடைக்கானல் தாசில்தார் ரமேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து கிடந்ததால் விரைவாக செல்ல முடியவில்லை.

இதையடுத்து அந்த மரங் களை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே அங்கு செல்ல முடிந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு 4 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

பின்னர் 4 பேரின் உடல் களையும் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் உறவினர்களுக் கும் தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்கள் வந்தபின்னரே அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானலில் மண்ணுக்குள் புதைந்து 4 பேர் இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்